Thursday, 26 September 2019

சோளிங்கர்_கோவிலில் உள்ள_நரசிம்மர்



கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.

மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.

ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.

ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த நரஹரியை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்துள்ளனர். திருமங்கையாழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர். அதோடு மட்டுமல்லாமல் அக்காரக்கனி எனும் மூலிகையினால் ஆனவரும் கூட.  இந்த புண்ணிய மலை மீது ஏறி வழிபட முடியாதவர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனதால் சிந்தித்தாலே போதும், மோட்சம் சித்திக்கும் என்று அருளியுள்ளார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை-யிலிருந்து 24kms உள்ள இவ்வூர் சோளிங்கர் என அழைக்கப்பட்டாலும் இதன் அருகில் 3 கி.மீ. தெற்கில் கொண்டபாளையம் எனும் சிறு கிராமத்தில்தான் பெரிய மலையும் சிறிய மலையும் உள்ளன. பெரிய மலைக்கோயிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோயிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும். 

பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன. மலையின் நுழைவாயில் 5 நிலைகளும் 7 கலசங்களும் கொண்ட ராஜ கோபுரத்துடனும் நான்குகால் மண்டபத்துடனும் திகழ்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி அமர்ந்த அமிர்தபலவல்லித் தாயாரின் தரிசனம் கிட்டுகிறது. இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு. மேல் இரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு அபய வரத கரங்கள் காண்போரின் பயம் நீக்கி ஆறுதல் அளிக்கின்றன. இத்தலத்தில் நம் கோரிக்கையை தாயாரிடம் கூறினால் தாயார் அதை நரசிம்மமூர்த்தியிடம் பரிந்துரைப்பாராம். நரசிம்மர், அனுமனிடம் அதை நிறைவேற்றும்படி ஆணையிடுவாராம்.

நரசிம்ம மூர்த்தியின் கருவறை விமானம் ஹேமகோடி விமானம். யோக நரசிம்மர் சிம்ம முகம் கொண்டு, கிழக்கு நோக்கி, யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சாளக்ராமங்களால் ஆன மாலையை அணிந்துள்ளார். யோக பீடத்தில் திருமாலின் தசாவதார காட்சியை தரிசிக்கிறோம். இந்த மூலவருடன், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட மறையாய் விரிந்த விளக்கு, மிக்கான், புக்கான் எனப்படும் உற்சவ மூர்த்திகளும் ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் போன்ற மூர்த்திகளும், பெருமாளின் எதிர்ப்புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், ராமானுஜர், சப்தரிஷிகள், கருடன் போன்றோரும் தரிசனம் தருகின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியன சேர்த்து பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து, பிறகு அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருடனுக்கு எதிரில் உள்ள சாளரத்திலிருந்து பார்த்தால் அனுமன் அருளும் சின்னமலையை தரிசனம் செய்யலாம். சிறிய மலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சநேயரின் திருக்கண்கள் நேராக பெரிய மலையில் அருளும் நரசிம்மப் பெருமாளின் திருவடிகளை நோக்கியபடி உள்ளனவாம்.

நரசிம்மரையும் தாயாரையும் வணங்கிய பிறகு, கீழிறங்கி சின்ன மலையில் அருளும் அனுமனை தரிசிக்கலாம். படிகள் ஏறி, உச்சியிலுள்ள அனுமன் சந்நதியை அடைகிறோம். வாயுகுமாரன் சாந்த வடிவினனாய், யோக நிலையில் நரசிம்மரை நினைத்து தவம் புரியும் திருக்கோலத்தின் அழகு நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. நான்கு திருக்கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். ஒரு கரத்தால் ஜபமாலையைப் பற்றியபடி, ஜபம் செய்யும் பாவனையில் தரிசனமளிக்கிறார். அருகிலேயே உற்சவ அனுமன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேகம் கண்டருள்கிறார் இந்த மூர்த்தி. குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார்.

அடுத்து ராமர் சந்நதி. இம்மலையில் சீதாபிராட்டியுடன் ராமர் நீராடிய குளம், ராம தீர்த்தம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அரக்கர்களை வதைத்த அனுமன் தன் சக்கரத்தை அதில் நீராட்டியதால் சக்கர தீர்த்தம் என்றும் அனுமத் தீர்த்தம் என்றும்கூட பெயர்கள் உண்டு. உடல் நலம் சரியில்லாதவர்கள், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி, அனுமனை நினைத்து வரம் கேட்பதைக் காண முடிகிறது. அதையடுத்து ராமபிரானின் குல ஆராதனை மூர்த்தமாகிய ரங்கநாதர் மூலவராகவும் உற்சவராகவும்
காட்சியளிக்கிறார்.

மலையிலிருந்து கீழிறங்கி ஊருக்குள் சென்றால், அங்கே பக்தோசிதசுவாமி என்ற உற்சவ நரசிம்மரை தரிசிக்கலாம். ஊரின் நடுவே நீள் சதுர வடிவில் எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். ராஜ கோபுரத்தைத் தாண்டி ரங்க மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பெருமாளின் சந்நதியை அடையலாம். இருபுறங்களிலும் ஜய, விஜயர்கள் காவல் காக்க உபய நாச்சிமார்களுடன் பெருமாள் அருள்கிறார். அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.

ஆண்டு முழுதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

Monday, 23 September 2019

ஜனாவின் அடிமையான விட்டலன்



பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம்.... பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண்குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.

பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர் திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும், தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய்.

அங்கு வந்த நாமதேவர் என்னும் மகான் ஜனாபாயிடம் பேசிஅவளது மனநிலையை அறிந்தார். கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

பாண்டுரங்கனின் சிறந்த பக்தரான நாமதேவர், சிறுவயதிலேயே சிறந்த ஞானியாக விளங்கியவர். நூறு கோடி பாடல்கள் (அபங்கங்கள்) பாடி இறைவனுக்கே உணவளித்த பாக்கியம் பெற்றவர். குழந்தை ஜனாபாயை தன் தாய் குனாயி அம்மையாரிடம் கொடுத்து,"முற்பிறவியில் இவளே கண்ணனால் கூன் நிமிர்த்தப்பட்டவள்,'' என்ற ரகசியத்தையும் கூறினார்.

அந்த ரகசியம் தான் என்ன!ராமாயணத்தில் கூனியாக வந்து கைகேயியை ராமனுக்கு எதிராகத் தூண்டி பாவத்தை சம்பாதித்தவள்.

கிருஷ்ணாவதார காலத்தில் கம்சனுக்கு சந்தனம் பூசி விடும் பணி செய்தாள். கம்சனின் நாட்டுக்கு வந்த கிருஷ்ணனை பார்த்து மெய்மறந்து அவனுக்கும் சந்தனம் பூசினாள். அதன் பலனாக அவளது கூனை கிருஷ்ணன் நிமிர்த்தினான்.

தெய்வத்துக்கு சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவதால் முற்பிறவி பாவம் கூட நீங்கும் என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்கள்.அந்தக் கூனி தான் இந்த ஜனாபாய்.அவள் நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு, கோவிலிலும் பஜனை செய்து கொண்டுகாலத்தை கழித்தாள். குழந்தையாகஇருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஒருநாள் இரவு கடும் காற்றுடன் மழை பெய்ததால் நாமதேவரின் வீட்டுச் சுவர் ஈரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதைக் கண்ட பாண்டுரங்கன், தன் பக்தனின் துன்பத்தை துடைக்க தானே நேரில்வந்து மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினார்.

 பாண்டுரங்கனைக் கண்ட நாமதேவரும், ஜனாபாயும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினர்.பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் ஜனாபாய்க்கு கிடைத்தது. வேகமாக வெந்நீர் தயார் செய்து சேறாகி இருந்த அவரது பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைத்து உலர வைத்தாள். அதுவரை பாண்டுரங்கன் ஜனாபாயின் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டார். அது அவரது திருமேனிக்குப் பொருத்தமாகவும் இருந்தது.பீதாம்பரம் உலரும் வரை பாண்டுரங்கன் சிறிது நேரம் கண்ணயர விரும்பினார். அவர் படுத்துக் கொள்வதற்கு வசதியாக தன் அறையில் இருந்த பழைய துணிகளையும், சாக்கு பைகளையும்ஜனாபாய் விரித்தாள். பகவானின் பாதங்களை மெதுவாகப் பிடித்து விட்டாள் பகவானோ ஜனா பாயின் சாணி நாற்றம் கொண்ட புடவையை திருடி கொண்டு செல்வான் அதை சூடி கொள்வான் ஒரு முறை ஜனா பாய் தட்டிய ராட்டியை பக்கத்து வீட்டு பெண் மணி திருடி கொண்டு தன்னுடைய ராட்டி என்றால் விசயம் நாம தேவர் வரை சென்றது அவரோ ஜனா தட்டிய ராட்டியா என சோதிக்க காதருகே ராட்டியை கொண்டு சென்றார் அந்த ராட்டி விட்டல விட்டல விட்டல என நாமஸ்மரணம் செய்தது இப்படி சதா விட்டல் பஜனையில் ஜனா காலம் கழித்தால் அது மட்டுமன்றி

 ஆதிசேஷனின் மலர்ப்படுக்கையில் அயர்ந்து உறங்கும் மலர்க்கண்ணன்," ஆஹா....! வைகுண்டத்தை விட இங்கு சுகமாக தூக்கம் வருகிறதே!'' என்று அழுக்குத் துணியிலேயே நன்றாகத் தூங்கி எழுந்தார்.பிறகு ஜனாபாய் சாப்பாடு போட, நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

நாமதேவர் பாண்டுரங்கனுக்கு தன் கையால் சோற்றை ஊட்டி விட அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த ஜனாபாய்தனக்கும் அந்த மாதிரி பாக்கியம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டாள். இதை அறிந்த பாண்டுரங்கன் அவளது அறைக்கு சென்றார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாபாயிடம்,"எனக்கும் ஒரு கவளம் ஊட்டி விடுதாயே!'' என்று கேட்டுக் கொண்டார்.

ஆனந்தக் கண்ணீர் வழிய அவள் பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள்.நிஜபக்தி ஒன்றுக்கே கட்டுப்படும் பாண்டுரங்கன், ஜனாபாயின் மடியிலேயே தலை வைத்து படுத்து விட்டார். பிறகு அவள் பகவானின் தசாவதார லீலைகளைப் பாடலாகப் பாடியபோது,"சபாஷ்' என்று சொல்லி ரசித்து மகிழ்ந்தார்.

 ஜனாபாய் உரலில் மாவு அரைத்தபோது தானியத்தை தன்கையால் தள்ளி விட்டு உதவியும் செய்தார்.ஜனாபாயின் பக்தியை உலகிற்கு அறிவிக்க திருவுள்ளம் கொண்டார் பாண்டுரங்கன். தன் பட்டு பீதாம்பரம் ஜனாபாய் வீட்டுக் கொடியில் காய்ந்து கொண்டிருக்க, அவளின்  சாணி பவுடர் நாற்றம் வீசும் கந்தல் புடவையை உடுத்திக் கொண்டு மறைந்து போனார்.

கோவிலின் கதவை மாலை நேர வழிபாட்டிற்காக திறந்த அர்ச்சகர்கள் அதிர்ந்தனர். பாண்டுரங்கன் அணிந்திருந்த அருமையான காசி பட்டும், ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன. ஒரு கந்தல் புடவை சிலையில் சுற்றப்பட்டிருந்தது.

ஜனாபாயின் குடும்பத்திற்கு மிகவும் பழக்கமான அர்ச்சகர்,"இது ஜனாபாயின் புடவை போல இருக்கிறதே!'' என்று சொல்ல எல்லாரும் நாமதேவரின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த பட்டு பீதாம்பரத்தைப் பார்த்து,

"இவள் தான் பாண்டுரங்கனின் பீதாம்பரத்தையும், ஆபரணங்களையும் திருடிக் கொண்டு வந்திருக்கிறாள்'' என்று சொல்லி வீட்டில் சோதனை செய்யத் தொடங்கினர்.

அவளது படுக்கை அறையில் ஆபரணங்கள் இருந்தன. அவளிடம்,"நகைகளை எப்போது திருடினாய்? பாண்டுரங்கன் கட்டியிருந்த வஸ்திரத்தைக் கூட விட்டு வைக்காமல் எடுத்து வந்து விட்டாயே?'' என்று விசாரித்தனர்.

ஜனாபாய் இதற்கெல்லாம் கலங்கவில்லை."நான் தவறு செய்யாதவள். அப்படி தவறு செய்ததாக நீங்கள் கருதினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள்,'' எனக் கூறி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள்.

அவள் பொய் சொல்வதாக நினைத்த அர்ச்சகர்கள் அரசனிடம் புகார் கூறினர். அவளை பொதுவீதியில் கழுவேற்றும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.ஜனாபாயை கழுமர மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

அவள் கழுமரத்தைப் பார்த்து கைகூப்பி, "விட்டல! விட்டல! ஜே! ஜே! விட்டல!'' என்று பாடினாள். கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பாண்டுரங்கன் ஓடி வந்து ஜனாபாயைத் தழுவிக் கொண்டு,"உன் நிஜபக்தியை உலகிற்குத் தெரிவிக்கவே இவ்வாறு செய்தேன்,'' என்று சொல்ல ஜனாபாய் அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள்.

ஜனாபாயின் புகழும், அவளது கீதங்களின் உயர்வும் நாடெங்கும் பரவியது. பாண்டுரங்கனே நேரில் வந்து ஜனாபாய் மற்றும் நாமதேவரின் பாடல்களை எழுதி தொகுத்தும் கொடுத்தார். அமுதமயமான அந்த பாடல்களே இன்றும் பண்டரிபுரத்தில் பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி

Monday, 16 September 2019

கோவிந்த் த்வயம் - யதுநிதியும் யாதிநிதியும்



கண்ணனுக்கும் நம் இராமானுசனுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

1. பிறப்பு - இருவரும் பரம பாதம் விட்டு நமக்காக அவதரித்தவர்கள்.

2. இருவரும் வடக்கே அவதாரம் - கண்ணன் பாராத தேசத்தின் வடக்கே, இராமானுசன் தமிழகத்தின் வடக்கே.

3. இருவரும் எதிரியின் ஆபத்தினால் ஒளிந்து வாழ்ந்தவர்கள் - கண்ணனுக்கு  பிருந்தாவன கோகுலவாசம். இராமானுசனுக்கு திருநாராயணபுர வாசம்.

4. இருவரும் உபதேஷ்டாக்கள் - கண்ணன் - கீதோபதேசம், இராமானுசன் -  ஸ்ரீபாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான உபதேசங்கள்.

5. இருவரும் தங்கள் அவதார ரஹஸ்யத்தை வெளியிட்டவர்கள் - கண்ணன் கீதையில் 4வது அத்யாயம் மூலம் வெளியிட்டான்.  இராமானுசர்  தொண்டனூர் சரித்திரம் மூலம் வெளியிட்டார்.

6. இருவரும் பிறந்த இடம் வேறு வளர்ந்த இடம் வேறு வாழ்ந்த இடம் வேறு - கண்ணன் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து த்வாரகையில் வாழ்ந்தான். இராமானுசர் ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்து, காஞ்சியில் வளர்ந்து, திருவரங்கத்தில் வாழ்ந்தார்.

7. இருவரும் எதிரிகளை வென்றவர்கள் - கண்ணன் தன் அடியவர்களின் எதிரிகளை வென்றான். இராமானுசர் பாஹ்ய குத்ருஷ்டிகளை எதிர்த்தார்.

8. இருவரும் கோவிந்தர்கள் - கண்ணன்: பசுவை ரக்ஷித்ததனால் கோவிந்தன்.  ஜ்ஞானேன ஹீன: பசுபி: சாமான: என்கிற ப்ரமாணதால்  ஜ்ஞானம் இல்லாத பசுக்களான நம்மை ரக்ஷித்ததால் அவர் கோவிந்தன்.

9. இருவருக்கும் பட்டாபிஷேகம் - கோவிந்த பட்டாபிஷேகம் கண்ணனுக்கு,  உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் இராமானுசனுக்கு.

10. இருவரும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தியவர்கள் - கண்ணன் த்ரௌபதி சரணாகதி மூலமாகவும் ப்ரபத்தியுபதேசம் மூலமாகவும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தினான்,  கத்யத்ராயம் மூலமாக இராமானுசர் சரணாகதியை அனுஷ்டித்து உணர்த்தினார்.

11. இருவரும் ஜெகதாசார்யர்கள்.

12. இருவரும் மனிதன் செய்ய முடியாத செயல்களைச் செய்தவர்கள். கண்ணனின் அதிமானுஷ்ய சேஷ்டிதங்கள் ப்ரசித்தம். இராமானுசர் காஷ்மீரம் சென்றது,  தொண்டனூரில் பாஹ்யர்களை வென்று தன் நிலையை வெளியிட்டது முதலானவையும், அதுமட்டுமின்றி அந்த மாதவன் செய்ய முடியாததையும் செய்தவர் இராமானுசர். கீழ்கண்ட பாசுரமே இதற்கு ப்ரமாணம்

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே"

Monday, 2 September 2019

பஞ்ச சம்ஸ்ஹார உற்சவம்- மதுராந்தகம்.


🙏🙏🙏👌👏👌👏
பஞ்சசம்ஸ்ஹாரம்/சமாஸ்ரயணம் என்னும் கிரியை ஒவ்வொரு வைணவருக்கும்,அவரது ஆசார்யர் செய்து வைக்கும் மிக இன்றியமையாத வைபவம்.
மோட்சம் அடையும் ஆசை யுடையோர் எல்லாம் முதலில் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து கொண்டு,திருமால் அடியார்கள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஆசையுடையோரெல்லாம் மோட்சம் அடையும் வழியை எளிதாக்கிய,ஸ்வாமி ராமாநுஜர்
தம் ஆசார்யர் பெரிய நம்பி ஸ்வாமியிடம் பஞ்ச
சம்ஸ்ஹாரம் செய்துகொண்டார்.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் ஆவணிமாதம்.
சுக்லபட்சம்,பஞ்சமி திதியன்று,
பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்சசம்ஸ்ஹாரம் செய்து வைத்தார்.அந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில்(இந்த ஆண்டு நாளை 03/09/2019) பஞ்சசம்ஸ்ஹார
உற்சவமாக மதுராந்தகத்தில் கொண்டாடப் படுகிறது.

இளையாழ்வார்,ராமானுஜர் ஆனார்
🙏🌺📢☀️✌️☘🙏
இளையாழ்வாருக்கு ஏற்பட்ட 6 சந்தேகங்களை,திருக்கச்சி நம்பிகள் மூலம்,காஞ்சி வரதராஜப்பெருமாள் தீர்த்து வைத்தார் .அதில் 6 ஆவது வார்த்தை:
"பூர்ணாசார்யம் மஹாத்மானம் ஸமாஶ்ரய குணாஶ்ரயம் (எல்லா நற்குணங்களும் பூரணமாக உள்ள பெரியநம்பி ஸ்வாமிகளை,ஆசார்யராகப் பற்றிக் கொள்".
இதைக் கேள்வியுற்ற ராமானுஜர் பெரிய நம்பிகளின் திருவடிகளில் சரணமடைய,உடனே ஶ்ரீரங்கம்
புறப்பட்டார். அதே சமயம், ஆளவந்தாரின் நியமனப்படி,
ராமானுஜரை ஶ்ரீரங்கம் அழைத்துவர பெரியநம்பி ஸ்வாமிகள் ஶ்ரீரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டார்.

இருவரும் மதுராந்தகத்தில்
(சென்னையிலிருந்து 77 கி.மீ.தென் மேற்கில்)சந்தித்துக் கொண்டனர்.இளையாழ்வார் பெரியநம்பிகளிடம் தண்டம் சமர்ப்பித்து தமக்கு உடனே அங்கேயே,பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைக்கும்படி வேண்டி னார்.நம்பிகள்,காஞ்சிபுரம் பக்கத்தில் தானே இருக்கிறது,
அங்கு போய் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் செய்து கொள்ளலாம் என்றார்.ஆனால் இளையாழ்வாரோ அந்த ஷணமே,அங்கேயே செய்ய வேண்டும் என்றும்,அதற்கு திருவாய்மொழியின்"மின்னின் நிலையிலே மண்ணுயிர் ஆக்கைகள்"(இப்பூவுலகில் வாழும் உயிர்களின் காலம் நிலையற்றது;மின்னலைப் போல ஒரு நொடியின் அணுவளவில் அழியக்கூடியது),பாசுரத்தை
மேற்கோள் காட்டினார்.இவரின் வைராக்கியத்தை மெச்சிய ஆசார்யர்,மதுராந்தகம்
ஏரியில் நீராடி வந்த(அந்த இடம் ஶ்ரீ பாஷ்யகாரர் படித்துறை என்றழைக்கப்படுகிறது) இளையாழ்வாருக்கு
ஏரி காத்த ராமர் கோவில் மதில் சுவரருகில் இருந்த மகிழமரத்தின் அடியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.

1.தாப ஸம்ஸ்காரம்-சங்கு சக்கரப் பொறியொற்றுதல்.
2.புண்டர ஸம்ஸ்காரம்-த்வாதச திருமண்காப்பு என்னும் 12 திருமண்காப்பு இடுதல்.
3.நாம ஸம்ஸ்காரம்-தாஸ்ய நாமம் சூட்டல்-அவ்வாறே இளையாழ்வாருக்கு"ராமானுஜர்" என்னும் பெயரை ஆசார்ய/அதிகாரபூர்வமாக சூட்டினார்.ஏற்கனவே அவர் ராமானுஜர் என்று அறியப்பட்டாலும்,
ஆசார்யன் அழைத்ததால் அன்றிலிருந்து தான் மாண்பு பெற்றது.
4.மந்திரஸம்ஸ்காரம்-திருமந்திரம்,துவையம்,
சரம ஸ்லோகம் என்னும் ரஹஸ்யத்ரைய உபதேசம் (இதனால் மதுராந்தகம்"துவையம் விளைந்த திருப்பதி"என்று போற்றப்படுகிறது).
5.யாக ஸம்ஸ்காரம்-
பெருமாளுக்குப் பூஜை செய்வதற்கான திருவாராதனைக் கிரமம்,என்னும் ஸம்ஸ்காரங் களைச் செய்து வைத்தார்.

மதுராந்தகத்தில் நாளை:
🔔📢🔊📯🥁🎺🔔
நாளை 03/9/2019
செவ்வாயன்று மதுராந்தகத்தில் நடைபெறும் வைபவங்கள்:.
1.விஸ்வரூபம்-காலை 7 மணி
2.தீர்த்தவாரி-8.00am
3 திருமஞ்சனம் 9.00am
3 பெரிய நம்பிகள்,ஏரி காத்த ராமர் மங்களாசாசனம்-10.30
4.பஞ்ச ஸம்ஸ்கார உற்சவம் 1.00pm
5 கோஷ்டி விநியோகம் 2.00pm
6 ஶ்ரீ பாஷ்யம்,திருவாய்மொழி- வித்வத் ஸதஸ் 3.00-6.00pm.
7.புஷ்ப பல்லக்கில் புறப்பாடு,மாலை 6.30.pm
8.ராமாநுஜர் சந்நிதியில் சாற்று முறை 8.pm

ராமானுஜருக்கு,பெரிய நம்பிகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த தாமிரத்தால் ஆன,சங்கு, சக்கரம்,பெரிய நம்பிகளின் திருவாராதனைப் பெருமாளான ஶ்ரீ நவநீத கிருஷ்ணர்,
தாமிரத்தால் ஆன திருவாராதனை வட்டில்கள் ஆகியவை இன்றும் உள்ளன. அவற்றுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. 1937 ல் தான் இவை கண்டு பிடிக்கப்பட்டன.சேத் மகன்லால் பங்கூர் என்பவர் 1937 ல் கோவில் திருப்பணி செய்தார்.
அப்பொழுது கோவில் திருச்சுற்றில் ஒரு குகை இருந்ததைப் பார்த்தார்கள்.
அதைத் தோண்டிப் பார்த்த போது 20 அடிக்குக் கீழே ஒரு சிறிய மண்டபமும்,அதனுள் மேற்குறிப்பிட்ட திருச்சின்னங்களும் இருந்தன.

மதுராந்தகம்/ஏரிகாத்த ராமர் பெயர்களின் சிறப்பு:
🙏🏿🙏🏿🙏🏿🌺🌸🌸🙏🏿🙏🏿🙏🏿
விபந்தக முனிவர் என்பவர் கருணாகர ராமரைத் துதித்து தவம் செய்தார்.வனவாசம் வந்த ராமர்,அவருடைய ஆஸ்ரமத்துக்கு வந்து அவருடன் சில நாட்கள் தங்கினார்.முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கையிலிருந்து திரும்பி வரும் போது,புஷ்பக விமானம்,இந்த இடம் வந்ததும் அதாகவே நின்று விட்டதாக வும்,சீதா,ராம,லட்சுமணர்கள் கீழே இறங்கி மீண்டும் விபந்தகருக்கு அருள் புரிந்ததாகவும் ஸ்தல புராணம்.அந்த "மதுர"மான (இனிய) நிகழ்வால் மதுராந்தகம்.

ஏரி காத்த ராமர்:
ஸ்தல புராணப்படி.ஒரு முறை பலத்த மழை பெய்ததால் மதுராந்தகம் ஏரி உடையும் நிலைஏற்பட்டபோது,வில்லேந்திய ராமரும்,லட்சுமணரும் ஏரிக்கரையில் நின்று அணை உடையாமல் காத்தனர்.
அப்போது மழை வெள்ளத்தைப் பார்க்க வந்த அன்றைய பிரிட்டிஷ் கலெக்டர்,இந்த அதிசய வைபவத்தைப் பார்த்து மெய் சிலிர்த்தார்.ராம பக்தர் ஆனார்.கோவிலைப் புணரமை த்து,தாயார் சந்நிதியை சிறப்பாகக் கட்டினார்.இதனால் ஏரி காத்த ராமர்.

ஆனால் ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரை இதை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று பாருங்கள்:
"ஶ்ரீ லக்ஷ்மிநாதன் என்னும் மிகப் பெரும் கருணைக்கடலிலிருந்து,
நம்மாழ்வார் என்னும் கார்மேகம்,ஞானம் என்னும் நந்நீரை.நாதமுனிகள் என்னும் மாமேருவின் மீது பெய்து, உய்யக்கொண்டார்,மணக்கால் நம்பிகள் என்னும் இரண்டு அருவிகளாகப் பொழிந்து, ஆளவந்தார் என்னும் நதியாகப் பிரவகித்தார்.அந்த நதியிலிருந்து,பெரிய நம்பிகள்,பெரிய திருமலை நம்பிகள்,திருக்கோஷ்டியூர் நம்பிகள்,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமாலை ஆண்டான் என்னும் 5 ஓடைகளாகப் பிரிந்து,ஶ்ரீ ராமானுஜர்,என்னும் பெரிய ஏரியை நிரப்பின.அந்த வற்றாத ஏரியிலிருந்து 74 கால்வாய்கள்(ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதி பதிகள்) மூலம் என்றும் நந்நீர் பெருகி வருகிறது"
இந்த ராமானுஜர் என்னும் ஏரியைக்காத்து,சம்பிரதாயத்துக்கு அளித்தார் ஶ்ரீ ராமபிரான்!

படங்கள்:
1)மதுராந்தகம் கோவில் கோபுரம்.
2)ஶ்ரீ பாஷ்யகாரர் படித்துறையில் ராமானுஜர் தீர்த்தவாரி.
3) ராமானுஜர்,பெரியநம்பிகள் மூலவர்/உற்சவர்
4)ஶ்ரீ ராமர் மங்களாசாசனத்துக்கு இருவரும் புறப்பாடு
5)பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த இடமான மகிழமரம்
6) & 6ஆ)பஞ்ச சம்ஸ்கார மண்டபம்.-நவநீத கிருஷணர்,சங்கு,சக்கரங்கள்
7)பெரிய நம்பி ஸ்வாமிகளுக்கும்,
ராமானுஜருக்கும் திருமஞ்சனம்
8)சங்கு,சக்கரங்கள்
9)பஞ்ச ஸம்ஸ்கார வைபவம்
10)ஶ்ரீகிருஷ்ணர்,சங்கு சக்கரங்க இருந்த குகை அறை
11)வித்வத் ஸதஸில் வித்வான்கள்
12)(ஏரி காத்த) கோதண்டராமர்,
சீதாப்பிதாட்டியார்,இளையபெருமாள்
13)ஏரி காத்த ராமர்-சித்திர வடிவில்

Thanks to
(பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)