படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார். குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
(01) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
(02) திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
(03) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
(04) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
(05) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
(06) திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
(07) திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
(08) திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
#வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும் :
பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.
(01) #திருக்கண்டியூர்
#பிரம்ம_சிரகண்டீஸ்வரர் :
ஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும்.
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே
- திருமந்திரம்:340
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார். பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு "கண்டியூர்" என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு "பிரமசிரக்கண்டீசுவரர்" என்று திருப்பெயர். இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
(02) #திருக்கோவிலூர் (திருக்கோவலூர்)
#வீரட்டேஸ்வரர் (அந்தகாசுர சம்ஹார மூர்த்தி) :
உலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும்.
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே
- திருமந்திரம்:339
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி. அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார்.
அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
(03) #திருவதிகை #வீரட்டானேசுவரர் :
(திரிபுரம் எரித்த தலம்)
ஈசன் முப்புரம் அழித்த திருத்தலம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே!
- திருமந்திரம்:343
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன. முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
(04) #திருப்பறியலூர் (கீழப்பரசலூர்) #வீரட்டானேசுவரர் :
(தட்ச சம்ஹார மூர்த்தி)
தக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். `பரசலூர்’ என்றே இப்போது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.
தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான். அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் `திருப்பறியலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
(05) #திருவிற்குடி #வீரட்டானேசுவரர் :
(ஜலந்தர சம்ஹார மூர்த்தி)
சலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில்.
எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே
- திருமந்திரம்:341
இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி.
இறைவன்:வீரட்டானேசுவரர்;
அம்பிகை:ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.
ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.
(06) #திருவழுவூர் #வீரட்டானேசுவரர்:
(கஜ சம்ஹார மூர்த்தி)
கயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், திருவழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் ஆகும்.
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.
இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.
(07) #திருக்குறுக்கை #வீரட்டேஸ்வரர்:
(மன்மதன் எரித்த தலம்)
காமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே
- திருமந்திரம்:346
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.
கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது. பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம். இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.
(08) #திருக்கடையூர்
#அமிர்தகடேஸ்வரர்:
(கால சம்ஹார மூர்த்தி)
மார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்.
கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,மான்
கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே"
- தேவாரம்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன். ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன். தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.
இந்த எட்டுத் தலங்களையும் ஒருதனிப்பாடலானது வருமாறு பாடுகின்றது.
"பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே"
பிறப்பிலி என்னும் பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும் வென்று, இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்.