Thursday, 29 April 2021

தம்பதியர் பிணக்கு தீர்க்கும் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்


மனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

*தம்பதியர் பிணக்கு தீர்க்கும் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்*


திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயண பெருமாள், தனது துணைவியார் லட்சுமி தேவியை தனது மடியில் அமர்த்தி ஒரு கரத்தால் தாயாரின் இடையை அணைத்தபடி சேவை சாதிக்கும் அழகை கண் குளிர காண வேண்டாமா?
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதை அடுத்து மகாமண்டபம். 

இந்த மண்டபத்தின் நடுவே கருடாழ்வாரின் தனி மண்டபம் உள்ளது. கருடாழ்வார், நாராயணப் பெருமாளைப் பார்த்தப்படி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் சுதை வடிவ திருமேனி அலங்கரிக்க அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது.

உற்சவர் இங்கு ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். 

அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

*கணவன்- மனைவி ஒற்றுமை*

தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை ஆராதிப்பதால், கண வன் - மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்கின்றனர் பக்தர்கள்.

தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு இல்லறம் நடத்த, இத்தல பெருமாள் அருள்புரியக் கூடியவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையே! குறிப்பாக திருவோண நட்சத்திரங் களில் பெருமாளையும், தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும் செய லாகும்.

உற்சவர் வரதராஜப் பெருமாள் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவதுண்டு.

இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கன்னிப் பெண் களின் கண்கண்ட தெய்வம். தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் கன்னியரின் கவலையை நீக்கி அவர்களுக்கு நல்ல துணைவரை இவர் அமைத்து தருவதாக கன்னிப் பெண்கள் நம்புகின்றனர்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி தங்கள் நன்றிக் கடனை மன நெகிழ்வோடு கணவரோடு வந்து தெரிவித்துக் கொள்கின்றனர், கன்னியராய் இருந்து மனைவி என்ற பதவியில் அமரும் அந்தப் பெண்கள்.

அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும், இந்த ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனி தோஷ நிவர்த்தியும் ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்த தலம் அமைந்துள்ளதால், அதாவது இரு ஆறுகளுக்கும் இடையே அமைந்துள்ளதால் ‘இடையாற்றுமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

*சந்தான கோபால கிருஷ்ணன்*

இங்கு உற்சவர் வரதராஜப் பெருமாளின் அருகே, சுமார் 20 செ.மீ. உயரத்தில் சந்தான கோபால கிருஷ்ணனின் உலோகச் சிலை ஒன்று உள்ளது.

குழந்தை செல்வம் இல்லையே என ஏக்கத்துடன் இந்த ஆலயம் வரும் தம்பதியர் தங்களுடன் ஒரு சிறிய மரத்தொட்டிலை கொண்டு வருகின்றனர். 

அந்தத் தொட்டிலை இந்த ஆலயத்தில் கயிற்றிலோ அல்லது சேலையிலோ கட்டுகின்றனர். பின்னர் இந்த சந்தான கோபால கிருஷ்ணனை அந்தத் தொட்டியில் இட்டு தொட்டிலை மெல்ல ஆட்டுகின்றனர். சிலர் ரம்மியமாய் பாடுவதும் உண்டு.

பின்னர் மூலவருக்கு அர்ச்சனையோ அபிஷேக ஆராதனையோ செய்து விட்டு நிறைந்த மனதோடு இல்லம் திரும்புகின்றனர்.

இந்த தம்பதியர் மறு ஆண்டு தங்கள் வீட்டில் தொட்டில் கட்டி அதில் தங்கள் குழந்தையை கிடத்தி தாலாட்டு பாடுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

தங்களது பிரார்த்தனை பலித்ததும் மீண்டும் இந்த ஆலயம் வரும் தம்பதியர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றிக் கடனை கண்ணீர் மல்க செலுத்தும் காட்சி இங்கு அடிக்கடி காணக் கூடியது.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும்.

மனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம் என்ற இத்தலம்.

அங்கு அப்படி என்ன தான் விசேஷம்?

*பண்டரிபுரம் பூலோக வைகுண்டம் என்று பலமுறை சொல்லப்படுகிறதே..!!*

அங்கு அப்படி என்ன தான் விசேஷம்?

தெருவெல்லாம் பாலாக ஓடுகிறதா?

எவருக்குமே எப்போதுமே பசியின்றி யதேஷ்டமாக ஆகாரம் இலவசமா?

யாருக்குமே காசே அவசியம் இல்லாத ஊரா?

துணியெல்லாம் இலவசமா?

வீடுகளை ராஜாவே தன் செலவில் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தானா?

இப்படிக் கேட்போருக்கு ஒரு பதில் தான் விடையாகும். "வைகுண்டம் என்றால் இது தான் உங்கள் நினைப்பா?"

இறைவன் மனிதனாகவே, மனித உணர்வுகளுடன், மனிதர்களோடு, கலந்து, பழகி, பேசி, உண்டு, உறங்கி, களித்து, ஆங்காங்கு தேவைப்பட்ட இடத்தில் தனது அமானுஷ்ய சக்தியைச் சிறிது வெளிப்படுத்தி அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்தானே அந்தக் காலம்-- அந்த இடம், பண்டரிபுரம் தான் பூலோக வைகுண்டமாக இருந்தது,

வைகுண்டம் விட்டலன் ருக்மணியோடு இருக்கும் இடம். அங்கு இருப்போர் அனைவரும் அவனைச் சதா கண்டு, களித்து மகிழும் இடம். அங்கு செல்ல, இப்படி அனுபவிக்க, தனித்தகுதி வேண்டுமே.   

எல்லோராலும் முடியாதே. அதெல்லாம் ஒன்றுமே இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு அவன் வந்து நம்மோடு பழகி மகிழ்வித்த போது நாம் வாழும் இடம் பூலோக வைகுண்டம் ஆகிவிடுகிறது.

விட்டலன் நாமதேவரைப் பிரிய முடியாதவன். அவர் வீட்டில் ஜனாபாய் வளர்ந்து சிறப்பாக ஆன்மீக வாழ்வு வாழ தேர்ச்சி அடைந்தபோது அவள் குடிசையும் விட்டலன் அடிக்கடி நடமாடும் ஒரு இடம் ஆனதில் என்ன ஆச்சர்யம்!.

விட்டலன் ஜனாவின் குடிசையில் அமர்ந்து அவள் பாடும் அபங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தான். 
சில நேரங்களில் அவள் விட்டலனின் ஆலயத்திலும் அபங்கங்களை இயற்றி பாடி அவனை மகிழ்விப்பாள். ஒரு நாள் ஆலயத்தில் விட்டலன் எதிரே ஜனா ஒரு புது அபங்கம் இயற்றி அதை பாடிக் காட்டினாள். 

"ஜனா இந்த அபங்கம் வெகு அருமையாயிருக்கிறது. நீ சொல்லிக்கொண்டே வா. நான் எழுதுகிறேன்" என்று அவள் பாடிக் கொண்டே வரும்போது அடி அடியாக விட்டலன் அதை எழுதிக் கொண்டு வந்தான். 

அந்த நேரம் பார்த்து ஞானதேவர் ஆலயத்திற்குள் நுழைந்தவர் தூரத்திலிருந்தே ஆனந்தமாக ஜனாவின் அபங்கத்தை ரசித்துக் கொண்டே வந்தார்.  

உள்ளே நுழைந்த ஞானதேவர் ஜனா பாடிக்கொண்டிருப்பதையும் விட்டலன் அவரைக்கண்டதும் தன கையை பின்னால் , மறைத்துக்கொண்டு சிரிப்பதையும் பார்த்தார். அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது

"விட்டலா என்ன செய்துகொண்டிருந்தாய்?

"ஒன்றுமில்லையே"

"என்னைக்கண்டதும் ஏதோ பின்னால் மறைத்தாயே ?

" அதுவா? ஜனா அபங்கம் ஏதோ புதியதாக பாடினாள், அதை எழுதிக்கொண்டிருந்தேன்."

"ஞானதேவர் இடி இடி என்று சிரித்தார் உடம்பு குலுங்க. என்னது, ஜனா அபங்கம் இயற்ற நீ அதை ஸ்ரத்தையாக எழுதினாயா?

"இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

"விட்டலா, ஜனா ஒரு குழந்தை. வாயைத் திறந்தாலே உன்னைப்புகழ்வது ஒன்று தான் அவள் வேலை. அவள் அபங்கம் உன்னையே புகழ்ச்சியாக பாடியதாக இருக்குமே.  

உன்னைப் பற்றிபுகழ்ச்சியாகப் பாடியதை நீயே எழுதிக் கொண்டிருந்தாயா ?

" ஆம். ஞானதேவ். அவள் இயற்றிய இந்த அபங்கம் மிகவும் உண்மையான அன்பினால் மனத்தூய்மையோடு உருவானது. எனவே தான் என்னைக் கவர்ந்தது."

"அது சரி உன்னை ப்பற்றி இன்னும் எத்தனை எத்தனையோ பேர் எல்லாம் பாடி இருக்கிறார்களே அவற்றையெல்லாம் நீ ஏன் எழுதிக்கொள்ளவில்லை?" 

"நல்ல கேள்வி கேட்டாய் ஞானதேவ். எவ்வளவோ கை தேர்ந்த சித்திரக்காரர்கள் வரைந்த விலையுயர்ந்த சித்திரங்கள் இருந்தும், ஒரு தாய்க்கு தனது சிறு குழந்தை குழந்தை கஷ்டப்பட்டு தான் தீட்டியதாக கொண்டு தரும் ஒரு கிறுக்கல் ஓவியம் தான் மிக்க சந்தோஷத்தை அளிக்கும் என்பதை நீ எவ்வளவு சுலபத்தில் மறந்து விட்டாய் பார்த்தாயா?".

"விட்டலா, பாண்டுரங்கா, பிரபோ" என்பதற்கு மேல் வார்த்தை எழவில்லை ஞானதேவுக்கு.

விட்டலனைக் கொள்ளை கொண்ட ஜனாபாய் இயற்றிய அபங்கங்கள் அவளது அடி மனத்திலிருந்து எழும்பிய ஆழ்ந்த பக்தியைக்கொண்டு ஆசை ஆசையாக விட்டலனுக்கு அற்பணித்தவை அல்லவா? இதனால் தான் இறைவன் வேண்டுவோர்க்கு வேண்டியவனாகிறான்.

Saturday, 17 April 2021

அரங்கனின் மடப்பள்ளி

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனின் மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்தது.


இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடப்பள்ளி. வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், வையகத்து நாயகியான தாயாருக்கும் ஆறு கால பூஜைக்கும் இங்கிருந்து தான் நைவேத்ய பிரசாத அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. திருக்கோயில் மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அதனால் என்ன? பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது. அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?

காலை 8.45 மணிக்கு திருவாரதனம். கோதுமை ரொட்டி படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு. ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார் பரிகலமாகப் பணியாற்றி வரும் ரெங்கன்.
வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு நல்லா பிசையணும். வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு பொரித்து எடுக்கணும். பெருமாளுக்கான ரொட்டி ரெடி. காய்ச்சாத பசும்பால் இரண்டு லிட்டர். மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு வேக வைத்த பாசிப்பருப்பு.

அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை. காலை ஒன்பது மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து வெண் பொங்கல். இதற்கு கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை காய்கறியமுது. பச்சரிசி உளுந்து மாவு தோசை. பெருமாள் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண மருந்து. சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த மருந்து.
மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை. இதற்குப் பெரிய அதிசரம் என்று பெயர். பெரிய அதிரசம் பதினொன்று. பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்), பாசிப்பருப்பு கறியமுது. தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம் இதற்கு சாத்தமுது என்று பெயர். அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட பாயசம். இதற்கு கண்ணமுது என்று பெயர்.

மாலை ஆறு டு ஏழு. சீராண்ணம் பூஜை. உளுந்து வடை பெரியது பதினொன்று. பெரிய அப்பம் ஆறு. பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. பால், பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு. இரவு ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு என்று முடித்தார் ரெங்கன்.
காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே ஸ்ரீ பண்டாரம் வந்து சேர்ந்து விடும். பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன் ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!” என்கிறார் பணியாளர்களில் ஒருவரான மாதவன்.

இரவு பத்து மணிக்கு பெருமாளுக்கு அரவணை பூஜை. ஆறுகால பூஜை வேளை நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட். அதனைப் பெற்றுக் கொள்ள இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில் பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும். இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு அரவணைப் பொங்கல். குங்குமப்பூ, ஏலக்காய் வெல்லம் இட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பால். (காலையில் காய்ச்சாத பால். இரவு காய்ச்சிய பால்) இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப் பொங்கலுடன், மிளகுக் குழம்பு (உப்புச்சாறு என்பார்கள்) நெய் விட்டு வேகவைத்த முளைக்கீரை.

இரவு ஒன்பதரை மணிக்கு மேலாக தாயாருக்கு பூஜித்த அரவணை, ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும் பக்தர்களுக்காக. அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக அரங்கனுக்குப் பூஜித்த அரவணை, பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும். பிறகென்ன? போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள். அதன் ருசியே தனி. பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் அரங்கனின் அரவணை.
திருக்கோயில் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். அடுப்பெரிய மர விறகுகள் தான் அடுப்பு. எத்தனையோ நவீனங்கள் வந்து விட்டாலும், மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி அன்னதானம்.

சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம். அதற்கான 
மடப்பள்ளியோ அத்தனை சுத்தம்.

Friday, 16 April 2021

*_இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோவில் 2021 வருட திருமஞ்சனம் தினங்கள்_*

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*ஏப்ரல்*

26 சித்ரா பௌர்ணமி

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*மே*

3 திருவோணம்

13 உரோகிணி

31 திருவோணம்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*ஜூன்*

9 உரோகிணி

27 திருவோணம்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*ஜுலை*

7 உரோகிணி

24 திருவோணம்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*ஆகஸ்டு*

3 ஆடிப்பெருக்கு & உரோகிணி

10 திருவாடிப்பூரம்

13 கருட நாக பஞ்சமி

21 ஹயக்ரீவர் ஜெயந்தி

30 ஸ்ரீ ஜெயந்தி

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*செப்டம்பர்*

18,25 புரட்டாசி சனிக்கிழமை

26 உரோகிணி

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*அக்டோபர்*

2,9,16 புரட்டாசி சனிக்கிழமை

14 திருவோணம்

24 உரோகிணி

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*நவம்பர்*

4 தீபாவளி

11 திருவோணம்

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*டிசம்பர்*

8 திருவோணம்

Thursday, 15 April 2021

🌺🌹#மகாலட்சுமியே_உப்பு🌹🌺

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌺🌹#மகாலட்சுமியே_உப்பு🌹🌺

🌹அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌺🍀எந்த லட்சியத்தையும் அடைய லவண (உப்பு) வழிபாடு🍀🌺

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹"உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!' என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர்.🌹

🌹விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள். 🌹

🌹இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரிய வெற்றி முறை இன்று மறந்தேபோய்விட்டது.🌹

🌹முத்தும், சங்குகளும் கடலில் பிறப்பது உப்புத்தன்மை இருப்பதால்தான் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.🌹 

🌹முற்காலங்களில், "வீடுகளில் திருஷ்டிகள், துர்சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது' என்று ஜோதிடர்கள் சொன்னால், ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை நடுவீட்டில் வைத்து, அதை மூன்று நாட்கள் கழிந்தபிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றி விடுவது ஐதீகமாக இருந்தது.🌹

🌻🌹மகாலட்சுமியே உப்பு🌹🌻

🌹அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.🌹

🌹அதனால்தான் இரவு நேரத்தில் லட்சுமிதேவி விரும்பித் தங்குகிற உப்பை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். தெய்வத்தன்மை கொண்ட உப்பை விற்பனை செய்தால் இடர்கள் வருமென்று முற்காலத்தில் சொல்வழக்கம் இருந்தது.🌹

🌹உப்பை ஏன் பானையில் மட்டும் போட்டு வைத்தார்களென்றால், மண்பானைக்கு ஸ்வர்ணம் என்ற பெயருள்ளது. அதாவது தங்கமென்று பொருள். இதில் தங்கமகளாம் மகாலட்சுமி வடிவ உப்பைப் போட்டு வைத்தால் பணக்கஷ்டமே வராது என்ற நம்பிக்கை இருந்தது. இக்காலத்தில் பிளாஸ்டிக் டப்பா, பாட்டில்களில் அடைத்துவைப்பதால் நிம்மதியில்லாமை, பொருள் கஷ்டங்கள் வருவதைக் காண்கிறோம்.🌹

🌺உப்பு தொடர்புடைய வழிபாட்டு நியதிகள்🌺

🌹"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றபழமொழிகளால் இதன் சக்தியை அறிந்துள்ளோம். ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.🌹

🌹எதிரிகளை அடங்கிப்போகும்படி செய்ய, உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்ததை விநாயகர் பிரார்த்தனை வரிசையில் காணலாம்.🌹

🌹தீட்டுக்காலம், பித்ருக்களுக்குச் செய்யப்படுகிற திவச வழிபாடு தினங்களில் உப்பில்லாத பண்டங்களைச் செய்து படையலிடுவதன் காரணம், வருகை தரும் முன்னோர்களுக்கு உப்பு கூட்டிச் சமையல் செய்துவைத்தால், இங்கேயே தங்கிவிடுவதாக ஐதீகம். அரை உப்புதான் போட வேண்டுமென்று ஒருசாரர் கருத்து.🌹

🌹கடற்கரைகளில் மாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற பித்ரு வழிபாட்டுக் காலங்களில் தர்ப்பணம் செய்வதால், அவர்கள் உப்புக்காற்றை வாங்கியபடி மகிழ்ச்சியடைந்து வாழ்த்துவதாக ஐதீகம் உள்ளது.🌹

🌹கடலிலிருந்து தோன்றும் உப்பை தலையில் போட்டு அதற்குரிய மந்திரம் சொன்னால் நோய்கள் யாவும் விலகிவிடும். மந்திரிக்கவும், திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடுவது வழக்கம்.🌹

🌹ஆலயங்களிலுள்ள பலிபீடத்தின்கீழ் உப்பையும் மிளகையும் போட்டால், நமக்குப் பிடிக்காதவர்கள் துன்பம் எய்துவர் என்ற வழக்கம் சமீபகாலங்களில் நிலவுகிறது. இது தவறான சிந்தனை. ஆலயத் தொட்டிகளில் சிறிது உப்பைப் போட்டு, "என் துன்பங்கள் நீரில் உப்புபோன்று கரைந்திடச் செய்வாய் இறைவா' என்று பிரார்த்தனை செய்துவருவதே முறையான வழிபாடாக அமையும்.🌹

🌺🌷சாந்தீபனி முனிவர் மகனை மீட்ட உப்புச் சூழல்🌷🌺
🌹கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் வில் பயிற்சி கற்றுக்கொடுத்தவர் சாந்தீபனி முனிவர். அந்த முனிவரின் மகனை பஞ்சஜனன் என்கிற அரக்கன் கடலில் ஒளித்து வைத்திருந்தான். குரு காணிக்கையாக அவர் மகனை மீட்டுத்தர எண்ணிய கிருஷ்ணர், கடல் அரசனைச் சந்தித்து விவரம் கேட்டு, அரக்கனிடம் போரிட்டு முனிவர் மகனை மீட்டபோது, அவன் உயிர் போனபின்பும் உப்புச்சூழ்நிலையால் (கடலுக்குள் குகை) உயிர் மீண்டுவந்தது. வாழ்வதற்கும் வளர்வதற்கும், நமது அவயவங்கள் வீணாகாமல் இருக்கவும் உப்பே ஆதாரப் பொருள்.

🌺வெளிநாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய உப்பு வழிபாடு🌺

🌹வெளிநாடுகளில் இந்த உப்புப் பிரார்த்தனை ஒரு ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. தாங்கமுடியாத வறுமை, கடன், கஷ்டங்கள் ஏற்பட்டதால் டேவிட்சன் என்ற அமெரிக்க தொழிலதிபர் தனது மனைவி பிரேவ், இளம் மனைவி கிளாரா, மகள் லிவியாவுடன் கடலில் முழுகித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.🌹

🌹தங்களை தெய்வம் கைவிட்டுவிட்டதாகக் கதறி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பிரார்த்தித்தபோது, ராட்சதக் கடல் அலை ஒன்றுடன் வந்த மூன்று பெண் உருவங்கள் கரைக்கு இழுத்து வருவதுபோல் ஒரு பிரமையை உணர்ந்து, கரைக்குத் திருப்பப்பட்டார்.🌹

🌹"கடவுளே! வாழ்க்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று நினைத்தால் நன்றாக வாழவிடு! எங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துவிடு!' என்று, அங்கிருந்த உப்புப் படிமங்களை நால்வருமே இருகைகளிலும் வைத்துக்கொண்டு, சூரியன் உதிக்கும் திசைநோக்கி பத்து நிமிடங்கள் பிரார்த்தித்தனர்.🌹

🌹பின்னர் வீடு திரும்பினர். வீட்டு வாசலிலிருந்த கடிதப்பெட்டியில் ஒரு கவர் சிரித்தபடி வரவேற்றது. என்னே ஆச்சரியம்! இவர்கள் கட்டிவந்த மாதச் சீட்டுக்கு ஜாக்பாட் தொகைமுப்பத்திரண்டு கோடி டாலர்கள் கிடைத்திருந்தது.🌹

🌹உப்பு பிரார்த்தனையை டேவிட்சன் கூற, இச்செய்தி எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆம்! வாழ்வில் சோதனைகளிலிருந்து மீண்டுவர, புனர்வாழ்வு கிடைக்க சிறந்த ஆன்மிக சாதனம் மகாலெஷ்மி வாசம் செய்யும் இந்த எளிய உப்பு பிரார்த்தனை!🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹☀லட்சியம் நிறைவேற லவண மந்திர ஜெபமுறை🌹☀

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
               🌹 ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் 33-ஆவது ஸ்லோகம் "சௌபாக்கிய மந்திரம்' எனப்படுகிறது. "ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' எனத் தொடங்கும் இந்த விசேடத் துதியை, இரு கைகளிலும் காசுகள் வைத்துக்கொண்டு ஜெபித்தால் நிறைவாகப் பணம் சேரும் என்ற கருத்துண்டு. அதேபோன்று உப்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு, அதிகாலை ஐந்தரை மணி முதல் 16 முறை நமது பிரார்த்தனையைச் செய்தல்வேண்டும். இப்படியாக ஜெபம் செய்த உப்பை சேகரித்துவைத்து, 48 தினங்கள் கழித்து நீர்நிலைகளில் போட்டு வரவேண்டும்.🌹

🌹 உண்மையான முறையில் சில மாற்றங்களைச் செய்து விட்டார்கள். சரியான முறையை ஜோதிட சாஸ்திரம் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Tuesday, 13 April 2021

விரும்பிய வடிவில் வருவான்...


குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். 

பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி. நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர். பூந்தானம் படிப்பறிவற்றவர்.

 "ஞானப்பானை' என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு. பட்டதிரி பெரும் கல்வியாளர் அல்லவா? கல்வியறிவற்ற தாம் அவரிடமிருந்து நல்லுரைகள் பெற்று அவற்றின்படி நடக்க வேண்டும் என்று அடக்கமே வடிவான பூந்தானம் நினைப்பதுண்டு. 

பட்டதிரி பெரும் பக்தராக இருந்தாலும் பூந்தானத்தைக் குறித்து, படிப்பில்லாதவர் அவர் என்று பட்டதிரியிடம் இளக்காரம் தோன்றுவது உண்டு. 

கண்ணன் இரண்டு மாபெரும் பக்தர்களின் உன்னத பக்தியையும் ஏற்றான். என்றாலும் பட்டதிரியின் கல்விச் செருக்கைச் சற்றுத் தட்டிவைக்கத் திருவுளம் கொண்டான்.
உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. 

அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார். உற்சவ விக்கிரகத்தையே கூர்ந்து பார்த்த அவர் திடீரென்று ஒரு விந்தையான வாக்கியத்தைச் சொன்னார். அதைக் கேட்டு எல்லோரும் திகைத்தார்கள். 

பட்டதிரி பூந்தானத்தைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் பூத்தார்.
எதையும் கவனியாத பூந்தானம், மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னார். அவர் மறுபடி அந்த வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் மூல விக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் கண்களில் கண்ணீர் வழிய, உற்சவ விக்கிரகத்தை நோக்கி ஓடி வந்தார்.

விம்மலுடன், பூந்தானம் சொன்ன வாக்கியத்திற்கு வலுச்சேர்க்கிற வகையில் தான் கண்ட காட்சியை அவரும் சொன்னார். 

கூட்டம் அளவற்ற திகைப்பில் ஆழ்ந்தது.
ஒருசில நாட்கள் முன்பு...
குருவாயூர் சன்னிதியில் நாராயணீயத்தைப் பிரவசனம் செய்து கொண்டிருந்தார் பட்டதிரி. 

பக்தர்கள் அந்தக் கவிச்சுவை நிறைந்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கேட்டுப் பரவசமடைந்தார்கள். அன்றைய பிரவசனம் முடிந்ததும் பட்டதிரி வீட்டிற்குப் புறப்பட்டார். 
அப்போது அவர் அருகே பவ்வியமாய் வந்து நின்றார் பூந்தானம். பட்டதிரி விழிகளில் ஏளனம். 

""என்ன பூந்தானம்? என் நாராயணீயத்தைக் கேட்க வந்தாயா? உனக்கு அதெல்லாம் எங்கே புரியப் போகிறது?

 படித்தவர்களுக்கான நூல் அல்லவா அது?'' ""புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன சுவாமி? குருவாயூரப்பன் புகழைச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு என் காதெல்லாம் தித்திக்கிறது. நான் தங்களிடம் ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம் கேட்கவே இன்று காத்திருந்தேன்!'' என்ன சந்தேகம்? கேள்! எதுவானாலும் நான் விளக்கம் தருகிறேன்!

""சுவாமி! நான் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானம் செய்கிறேன். சிலநேரம் அவனது மயில் பீலி அசைவது மனக் கண்ணில் தெரிகிறது. சிற்சில நேரம் அவனது புல்லாங்குழலின் காட்சி கிட்டுகிறது. 

அவனுடைய அருள்பொங்கும் தாமரைக் கண்களை ஒருநாள் மனக்கண்ணால் பார்த்து உருகினேன். ஆனால், சுவாமி, என்னவோ, அவனது முழு உருவையும் சேர்த்துப் பார்க்கும் பாக்கியம் மட்டும் கிட்டுவதில்லை.

 என் கண்ணனை முழு உருவிலும் பார்க்க வேண்டுமானால் என்ன வடிவத்தில் அவனைத் தியானம் செய்வது நல்லது? தாங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்!''
குழந்தைபோல் வெகுளியாக பூந்தானம் கேட்ட கேள்வியைப் பட்டதிரி உள்வாங்கிக் கொண்டார். 

குருவாயூரப்பனை முழு உருவில் தரிசிக்க விரும்புகிறானாமே படிப்பறிவில்லாத இந்தப் பாமரன்! இவனுக்கு என்ன உருவில் தியானம் செய் என்று நான் அறிவுறுத்துவது? இவனுக்கு பக்தி எதற்கு? கல்வியறிவற்ற இவனைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு!'' இப்படி நினைத்தார் பட்டதிரி. 
கண்ணனே மாடு மேய்த்தவன் தான் என்பதும் மாடுமேய்த்த கண்ணன் தான் பண்டிதர்கள் போற்றும் கீதையை உரைத்தவன் என்பதும் அந்த நேரத்தில் அவருக்கு மறந்து போயிற்று. நகைத்தவாறே அவர் பூந்தானத்திடம் சொன்னார்.

""முழு உருவையும் தரிசிக்க வேண்டுமானால் உனக்கு அதிகம் பழக்கமான உருவில் குருவாயூரப்பனை தியானம் செய்யேன்! எருமை மாட்டு வடிவில் கூடக் கண்ணனை நீ தியானம் செய்யலாம்''. அலட்சியமாக இப்படிச் சொல்லிவிட்டு பட்டதிரி சென்றார்.

 ஆனால் பூந்தானம் பட்டதிரியின் மேல் அளவற்ற மரியாதை கொண்டவராயிற்றே? தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் தான் பட்டதிரி அப்படிச் சொன்னார் என்ற உண்மை பூந்தானத்திற்கு உறைக்கவில்லை. 

அவர் பட்டதிரியின் வாக்கை வேதவாக்காக ஏற்றார். அன்று தொட்டுக் கண்ணனை எருமை மாட்டு வடிவில் தியானம் செய்யலானார். 

கண்ணனுக்கு அளவற்ற ஆனந்தம். இருக்காதா பின்னே! அவன் எடுத்த பத்து அவதாரங்களில் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவுமெல்லாம் உருக் கொண்டானே தவிர எருமை மாடாக உருக் கொள்ள சந்தர்ப்பமே நேரவில்லையே!

 எருமை மாடும் அவன் சிருஷ்டியில் ஒன்று தானே! இதோ! ஓர் அபூர்வ வாய்ப்பு... தவற விடக் கூடாது இதை!
பூந்தானத்தின் மனத்தில், சேற்றைப் பூசிக் கொண்டும் கொம்புகளை அசைத்துக் கொண்டும் வாலைச் சுழற்றிக் கொண்டும் கம்பீரமான எருமை மாடாகக் காட்சி தரலானான் கண்ணபிரான். ருக்மிணியும் சத்யபாமாவும் வேறுவழியின்றி அவசர அவசரமாக பெண் எருமைகளானார்கள்! 

சேற்றிலும் சகதியிலும் கண்ணன் தன் சகதர்மிணிகளோடு ஆனந்தமாக விளையாடுவதை மனக் கண்ணால் கண்ட பூந்தானம் மெய்மறந்தார். எருமை வடிவில் கண்ணனை தரிசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது? காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது. அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!

""இதென்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு! மயில் பீலியும் புல்லாங்குழலும் காதில் குண்டலங்களும் தலையில் மணி மகுடமுமாய் என்னப்பன் குருவாயூரப்பன் பல்லக்கில் எழிலோவியமாகக் காட்சி தருகிறான்! பூந்தானம் எருமை மாட்டை வர்ணிக்கிறாரே!'' 

பட்டதிரி நகைத்தபோது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்.

""அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. 

தன் எருமைக் குரலில் ""என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்!

 பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!''
அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார்.

 இதொன்றையும் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!'' என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! 

அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து "ம்மா!' என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது! 

எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார். 

கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். 

""படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்! பஞ்சாங்கத்தில் என்றைக்கு மழைவரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதே! நான் படிப்பறிவுள்ள பஞ்சாங்கம் மட்டும்தான். பூந்தானமே! நீரல்வோ கண்ணனை நீராட்டிய பக்தி மழை!''

பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. ""ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்...
படித்ததில் பிடித்தது

Sunday, 11 April 2021

ஸ்ரீ நாராயணீய மஹாத்மியம் !!

ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻

ஸ்ரீ நாராயணீய மஹாத்மியம் !!

குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டதிரி ஆவார். 

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, வட மொழியில் பக்தி சொட்டச் சொட்ட எழுதப்பட்ட கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம். 

பரசுராம ஷேத்திரம் என்ற புராணப் பெருமையுடன் திகழும் கேரள மாநிலத்தில் உள்ளது குருவாயூர்.

அங்கு இறையருளால் இளம் பிராயத்திலேயே அனைவரும் அதிசயக்கும் படியான அறிவு, ஆற்றல், பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தார் பட்டதிரி.

அச்சுத பிஷரோடி இவரது குரு.. 

தனக்கு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கும் குரு – வாதரோகம் என்ற நோயினால் கஷ்டப்படுவதைக் கண்டார் பட்டதிரி. 

குருவிற்கு குரு தட்சணை அளிக்கும்
நேரமும் வந்தது. 

தமது நன்றிக் கடனாக குருவைத் தொற்றியுள்ள நோய் அவரை விட்டு விலகி தன்னைப்பற்றிக் கொள்ளட்டும் என்று கடவுளிடம் மன்றாடி வேண்டிக்கொண்டு தானே வலிய வர வழைத்துக் கொண்டார்.

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள மொழியில் அக்காலத்தில் பிரபல கவிஞராக விளங்கியவர். 

இளமைப் பருவத்தில் இருந்த அந்த நோய் நீங்கும்பொருட்டு இவரை அணுகினார் பட்டதிரி. 

அவர் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீ குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீ குருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி ஸ்லோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார். 

நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச் சொல்ல அவரது தம்பி ஓலைச்சுவடியில் எழுதி நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீ மந் நாராயணீயம் என்னும் வரப்பிரசாதம் ஆகும்.

1034 வடமொழி சுலோகங்களால் ஆனது ஸ்ரீமந்நாராயணீயம். 

குருவாயூரப்பன் சந்நிதியில் தினமும் பத்து ஸ்லோகங்கள் வீதம் (ஒரு தசகம்) 100 தசகங்களில் நாராயணீயத்தை பாடி முடித்தார் நாராயண பட்டதிரி. 

அவ்வாறு பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ண பகவான் பாதத்தில் சமர்ப்பித்தார். 

அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீகுருவாயூரப்பன் அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது ஸ்தோத்ரங்களை அங்கீகாரம் செய்தாராம். 

அதுவும் பிரகலாத சரித்திரத்தை, பட்டதிரி வர்ணிக்கும்போது மூலஸ்தானத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டதாம். 
(நரஸிம்ஹராகக் காட்சியளித்ததாகவும் கூறப்படுவது உண்டு).

புகழ்பெற்ற ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர உற்சவ தினங்களில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி ஸ்ரீமந் நாராயணீய தினம் என்று விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. 

1586ஆம் ஆண்டு விருச்சிகம் 28ஆம் நாளில் ஸ்ரீ பட்டதிரி அவர்கள் ஸ்ரீமந்நாராயணீய காவியத்தை கிருஷ்ணன் பாதங்களில் சமர்ப்பித்து அனைவருக்கும் பெருமை கொடுத்த நாள் இது.

 100 வது தசக பாடல்களில், குருவாயூரப்பனின் தலை முதல் கால் வரை (கேசாதி_பாதம்) வர்ணித்துள்ளார் பட்டத்திரி.

அப்போது குருவாயூரப்பனே அவருக்கு நேரில் தரிசனம் அளித்தார். 

அன்று பட்டத்திரியை பீடித்து இருந்த வாதரோகமும்_நீங்கியது. 

இந்த தினத்தைத்தான் குருவாயூரப்பன் ஆலயத்தில் பிரதி_வருடம்_கார்த்திகை 28ம் தேதியன்று 'நாராயணீய தினம்' என்று தேவஸ்வம் சார்பில் கொண்டாடுகிறார்கள். 

அன்று ஆலயத்தில் பட்டத்திரி அமர்ந்து பாடிய இடத்தில் சிறப்பான கோலங்கள் இட்டு, விளக்கேற்றி, 
ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்வார்கள். 

நாராயணீயத்தைப் பற்றி விளக்க உரை, சொற்பொழிவுகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முக்கியமாக நாள்பட்ட நோயினால் அவதிப்படுபவர்கள் ஆலயத்தில் கூடி குருவாயூரப்பனைதரிசனம் செய்து பலன் பெறுவார்கள். 

பட்டத்திரி_வாழ்ந்த_மேல்பத்தூர் இல்லத்திலும் இந்நாள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

Wednesday, 7 April 2021

என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்" என்று வேண்டிக் கொண்ட பக்தன் - விளக்கும் எளிய கதை

ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻

மாயக் கண்ணா எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா என தெரியவில்லை. 

என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது  தரிசனம் தர வேண்டும்" என்று வேண்டிக் கொண்ட பக்தன் - விளக்கும் எளிய கதை

துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. 

சில காலம் முன்பு அங்கு 'போதணா' என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.

எப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் "துவாரகா ராமதாசர்" என்று கூப்பிட்டனர்.

தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.

ஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

அதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார்.

இவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். 

ஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை.

ஒரு மரத்தடியில் அமர்ந்து,"கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார்.

அவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே! உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்" என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார்.

விக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி,  நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார். 

அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர்.

டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர்.

ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர்.

ராமதாசர், "கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது" என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், "என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்" அவர்கள் கொடுத்து விடுவார்கள்" என்று சொன்னார்.

அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப்போகிறார்? என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். 

ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார்.

தனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்யம்!!! தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது.

அர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். 

மெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார்.

இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது.

தன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்தார் 

டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை 'ராஞ்சோட்ஜி' என்று அழைக்கின்றனர்.

கண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம்.

கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த மரம் இன்றும் கூட இருக்கிறது.

ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.