Friday, 24 December 2021

கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு


கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.

வசையில் நான்மறை கெடுத்த
அம்மல ரயற்கருளி முன்பரி முகமாய்
இசைகொள் வேதநூ லென்றிலை
பயந்தவனே எனக்கருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்
திருவெள்ளறை நின்றானே!

எனக் கூறப்பட்டுள்ளது. பரிமுகன், அஸ்வ சிரவா என்றும் ஹயக்ரீவரை அழைப்பதுண்டு. முதன்முதலில் உலகம் தோன்றிய காலத்தில், அதில் மனிதர்கள், மற்ற ஜீவராசிகளை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி திருமால் யோசித்தார். தனது யோக சக்தியால் பிரம்மதேவனை முதலில் உருவாக்கி, அவரிடம் படைக்கும் தொழிலை ஒப்படைத்தார். அதற்கு உதவ வேதங்கள், தேவ ரகசியம் ஆகியவை அடங்கிய பிரம்மச் சுவடிகளைக் கொடுத்தார். இந்தச் சுவடிகளைக்கொண்டு தனது பணிகளை பிரம்மதேவன் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் தன்னையறியாமல் சற்று கண்ணயர்ந்தார். அப்போது மது, கைடபர் என்கிற அரக்கர்கள் பிரம்ம தேவனிடமிருந்து பிரம்மச் சுவடிகளைத் திருடி, அதை கடல் நீருக்கடியில் மறைத்து வைத்துவிட்டனர். சுவடிகளைக் காணாமல் கலங்கிய பிரம்மதேவன், அதை மீட்டுக்கொடுக்குமாறு திருமாலிடம் வேண்டினார். மிக முக்கியச் சுவடிகள் காணாமல் போனதால், திருமால் வெண்குதிரை முகத்துடனும், மனித உடலுடனும் ஹயக்ரீவர் என்கிற அவதாரத்தை எடுத்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார். பின்னர் சுவடிகளைத் திருடிய அரக்கர்களைக் கொன்றார். வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படித்த பின்னர், வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.

(தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.)

இப்படி வழிபாடு செய்தால் படித்த பாடங்கள் நன்கு மனதில் தங்கும். தேர்வு நேரத்தில் சட்டென நினைவுக்கு வரும். தேவையில்லாத பயம், கவலை போன்றவை அகலும்.

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு குருவான ஹயக்ரீவர் சில இடங்களில் தாயார் லட்சுமிதேவியைத் தன் மடியில் வைத்து லட்சுமி ஹயக்ரீவராக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் சேர்ந்து கிட்டும்.

உடுப்பியில் பிறந்த வாதிராஜதீர்த்தர் (1480-1600) என்கிற மத்வ மடாதிபதி, தினமும் தனது தலைக்குமேல் தட்டில் இறைவனுக்கு படைக்கவேண்டிய நைவேத்தியத்தை வைத்துக்கொள்வார். வெள்ளை குதிரை வடிவில் ஹயக்ரீவர் அவருக்குப் பின்புறம் வந்து தோள்கள் மீது இரண்டு முன்னங்கால்களை வைத்து நைவேத்தியத்தை உண்பார்.

ஞான வடிவான ஹயக்ரீவரை வழிபட ப்ரார்த்னா மூர்த்தியாக நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்களில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவராக சேவை சாதிக்கிறார்.
 வித்யா ஸ்வரூபனான ஹயக்ரீவரைக் குறித்து முப்பத்தியிரண்டு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை சுவாமி தேசிகன் எழுதியுள்ளார். இதைச் சொன்னால் நல்ல ஞானம் வரும். முடிந்தளவுக்கு சிறு வயதிலேயே ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். மாணவ - மாணவிகள் தினமும் பக்தியுடன் ஹயக்ரீவரை வணங்கினால் அது நிச்சயம் நல்ல பயனைக் கொடுக்கும். 24.12.21.

மார்கழி மஹான்கள்

நன்றி : திருமலை சீனிவாசன்.
 மேற்கு மாம்பலம்.

*மார்கழி மஹான்கள்*

*24.12.2021*

*மஹான் பானு தாசர்*
*பக்தி பொதுவானது. என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும்.  பகவான் ஒன்று தான் வழிபடும் நடைமுறையில் தான் வேறுபாடு. பகவானை எப்படி வழிபட்டாலும் அவன்,  கஷ்ட காலத்தில்  நேர்மையான பக்தனை ஒரு நாளும் கை விடாது காப்பான். ஆபத்து பாந்தவன் என்ற பட்டம் அவனுக்குத் தானே பொருந்தும். சாதுக்களை ஏதோ வகையில் காப்பது அவன் வழி. அது அவனது தனி வழி. வியாபாரத்தில் நேர்மையான வியாபாரியை என்றும் காப்பான். பகவான் நாமாவை  தனது  உயிர் மூச்சாய் நினைத்து உரைத்திடும் பக்தனுக்கு பாதுகாவலன் மட்டுமல்ல வாழ்வை முன்னேற்றமடைய செய்யும் பகலவன். அவன் குலம் விளங்கச் செய்யும் குண சீலன். பாண்டு ரெங்கன் மஹிமையை நம் போன்றோரால் உரைக்கத்தான் முடியுமோ!*


நமது தமிழ்நாட்டில் சிவன் பெருமாள் கோவில்களும் உள்ளன. சைவம் வைணவம் என்று பிரித்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டதட்ட எல்லோரும் வார்கரி சம்பிரதாயம் தான்.
அந்த மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நல்ல குலத்தில் *பானு தாசர்*( நிஜம் பெயர் விவரம் கிடைக்கவில்லை) பிறந்தார். அவரது தந்தை வேதமும் மற்றும் பல சாஸ்திரங்களைக் கற்பிக்க நினைத்தார். ஆனால்  அவருக்கு படிப்பு ஏறவில்லை. தந்தையின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வந்தார்.வனம் செல்ல நினைத்த அவர் காட்டின் அருகே ஒரு பழைய சூரிய நாராயணன் கோவிலில் ஒளிந்த இருந்தார்.  மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி கிடந்தார். சூரிய நாராயணனே ஜோதி வடிவில் தரிசனம் தந்தார். பின் ஒரு பிராமண வடிவில் வந்து தினமும் பசும் பால் பிரசாதமாக தந்தார். ஒரு வாரம் இது நடந்தது. பின் அந்த பிராமணர்  அவரை வீட்டுக்கு செல்ல சொன்னார். அந்த கட்டளை ஏற்று வீடு திரும்பி நடந்ததை கூறினார். அதிலிருந்து அவரை ( சூரியன் என்றால் பானு) பானு தாசர் என் அழைக்கப் பட்டார்.  பால் பிரசாதம் அருந்திய பிறகு அவர் உடலும் மனமும் மாறி இருந்தது. முகம் பிரகாசித்தது. அவரை பார்க்க மிகவும் இனிமையாக இருந்தது. பேச்சும் நடத்தையும் மாறியிருந்தது. பகவான் நாமாவில் மனம் லயித்திருந்தது. எப்போதும் விட்டல்! விட்டல்! பாண்டு ரெங்கா! விட்டல் விட்டல் பாண்டு ரெங்கா! என்றே சொல்லிக் கொண்டே இருந்தார். இதனிடையே அவரது பெற்றோர்கள்
துணிக் கடை வியாபாரத்தில் ஈடுபட செய்தனர். வியாபாரத்தில் சத்தியத்தை கடைப் பிடித்தார். மற்ற வியாபாரிகள் இவரை அசடு பித்தன் என்றார்கள். 
தகுந்த வயதில்  கல்யாணம் நடந்தது. குடும்பம் ஏற்பட்டு குழந்தை பிறந்து விட்டன. கண்ணியமாக வணிபம் செய்து வந்தார். கஷ்டம் வந்தது. ஆனாலும் நேர்மையாய் வியாபாரம்.   இதனால் நல்ல பெயர் கிடைத்தது.ஊரில் இவரின் நேர்மையை கண்டு வியந்து இவரிடமே துணி வாங்கினார்கள். நல்ல வியாபாரம் பெருகியது.  வியாரத்தில் வெற்றிக் கண்டதால் மகிழ்ச்சி நிலவியது. அதே நேரத்தில் பகவான் பாண்டு ரெங்கனை மறக்காது ஜபம் செய்து கொண்டுதான் இருந்தார். *பக்தியுடனும் நேர்மையுடனும் வியாபாரம் செய்தால் பகவான் தானே காப்பான் அல்லவா!* குடும்பத்தில் சந்தோஷம் நிலவியது. இதே சமயம் மற்ற வியாபாரிகள் இவரின் வளர்ச்சிக் கண்டு பொறுக்க வில்லை. 

ஒரு முறை வாரசந்தைக்கு அவரவர் குதிரைகளில் துணிகளை எடுத்து  ஒன்றாக சென்றார்கள். பானு தாசரும் தனது குதிரையில் சென்றார். போகும் வழியில் இரவு வந்ததால் சத்திரத்தில் தங்கினார்கள். அருகே பாண்டு ரெங்க பஜனை சப்தம் வந்தவுடன் பானு தாசர் பஜனையில் கலந்து கொள்ள சக வியாபாரிகளிடம் தனது துணிகளை ஒப்படைத்து விட்டு பஜனைக்கு சென்று விட்டார். சகவியாபாரிகள் இது தான் சமயம் என்று பானு தாசரின் துணிகளை ஒரு பாழும் கிணற்றுக்குள் போட்டு விட்டு திரும்பி வந்து சத்திரத்தில் வந்து படுத்துக் கொண்டார்கள். *சாதுக்கு தீமை* *செய்தால்*
*பாண்டு ரெங்கன்* *பார்த்துக் கொண்டிருப்பானா? சாதுக்களை காப்பதில் அவனக்கு என்றுமே தனி பிரியம்.*

சத்திரத்தில் திடீரென திருடர்கள் வந்தார்கள். படுத்திருந்த சகவணிபர்களுக்கு அடி உதை கொடுத்து  அவர்களது துணிமணிகளை எடுத்து சென்றார்கள். இதனிடையே பானுதாசர் பாண்டு ரெங்கன் பஜனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. 


இங்கு வணிகர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். சாது பானு தாசருக்கு நாம் தீங்கு செய்ததால் தான்  நமக்கு தீங்கு நேரிட்டது என்று உணர்ந்து கொண்டார்கள். பாண்டு ரெங்கன் பஜனை செய்து விட்டு திரும்பிய பானு தாசரிடம் தாங்கள் செய்த தவறைத் கூறி அதனால் ஏற்பட்ட துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இவரிடம் கிணற்றிலிருந்து துணி மூட்டைகளை எடுத்து கொடுத்து விட்டு அவரது குதிரையை வெளியேறுவேன்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்  என்று சொன்னார்கள். அவர்களது அனைத்தும் களவு போய் விட்டது எனக் கூறினார்கள்.

வெளியே வந்து பார்த்தார். குதிரை மட்டும் இருந்தது. இது வரை குதிரையை பாதுகாத்தது பாண்டு ரெங்கனா? அப்படியே அதிசயப்பட்டு போய் விட்டார்.

*"கவலைப் படாதீர்கள் ! பாண்டு ரெங்கன் உங்களை காப்பான். உங்களுக்கு கஷ்டம் வராது என்று சொல்லி விட்டு தனது துணிகளை அவர்களிடம் பிரித்து கொடுத்து விட்டு அவர் அன்று முதல் பகவன் நாமாவே பெரிதென நினைத்து, வியாபாரத்தை துறந்தார்.* *"இனி நமக்கு பாண்டு* *ரெங்கனே துணை!" என்று நினைத்தார்.*

 இதனிடையே  சிலகாலம் கழித்து அவர் காசிக்கு பயணம் பட்டார். *பயணம் முடிந்து   திரும்பி வரும் போது  *பண்டரீபுரத்தில் உள்ள பாண்டு ரெங்க விக்ரஹத்தை  பக்தியின் காரணமாக *விஜய  நகர அரசன் இராமராயர் ஆசைப் பட்டு தனது ஊரான* *ஹம்பியில் பிரதிஷ்டை செய்தான் என்று கேள்விப் பட்டார்* பண்டரீபுரம் ஊர் பாண்டு ரெங்கன் இல்லாது விறிச்சோடிக் களை இழந்து கிடந்தது. பானு தாசர் இதனை அறிந்தார்.  இதுவும் பாண்டு ரெங்கனின் லீலை தான். முதலில் ஹம்பியில்  இருக்கும் பாண்டு ரெங்கனிடம் முறையிடலாம். பின் அரசனைப் சந்திக்கலாம்.  பாண்டு ரெங்கனையும் அரசனையும் காண உடனே ஹம்பிக்கு சென்றார்.

ஹம்பியில் பாண்டு ரெங்கன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. அரசன் உறங்கும் போது அவனது கனவில் பாண்டு ரெங்கன் தோன்றி,*" நீ தவறு செய்யாத வரையில் தான் நான் ஹம்பியில் இருப்பேன்! நீ தவறு செய்தால் நான் மீண்டும் பண்டரீபுரம் சென்று விடுவேன்! "* என்றார். 

இதனிடையே பானு தாசர்,  பாண்டு ரெங்கனிடம் வேண்டிக் கொண்டார். பாண்டு ரெங்கன் அவருக்கு தன்னுடைய நவரத்தின மாலையை அணிவித்தான். இதை பாண்டு ரெங்கன் பிரசாதமாக  அணிந்து அடுத்த நாள் காலை துங்கபத்ராவில் குளித்து கொண்டிருந்தார்.  கோவிலில்  ஆபரணத்தை காணாது தவித்தனர் கோவில் நிர்வாகிகள். திருடிய வனைப் பிடிக்க அரசர் கட்டளையிட்டார். திருடனை உடனே பிடிக்க வீரர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது.  வீரர்கள் துங்கபத்ரா நதிக்கரை வழி வரும்போது பானு தாசர் ரத்தின மாலை  அணிந்திருப்பதைக் கண்டு, அவரைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். *இதுவும் பாண்டு ரெங்கனின் லீலை எனக் கருதி பானு தாசர் பேசாமல் இருந்து விட்டார்.* 

அரசன்,  பானுதாசரின் கழுத்தில் ரத்தின மாலையைப் கண்டதும் விசாரணை செய்யாமலே, கழுவிலேற்ற உத்திரவிட்டான். காவலாளிகள் அவரை கழுவிலேற்ற அழைத்துச் சென்றனர். 
*பானு தாசர் பாண்டு ரெங்கனிடம் வேண்டினார்." இதுவும் உன் செயல் தான்!  "* என்று நினைத்துக் கொண்டார்.

அவர் அங்கு கழுவிலேற்ற அழைத்துச் சென்றதும் அந்த பட்ட மரம் துளிர்த்தது. இதைக் கண்டு காவாலாளிகள் ஆச்சரியப்பட்டனர். நேரே அரசனிடம் சென்று நடந்த விஷயத்தைச் சொன்னார்கள்.  அரசன் தவறை உணர்ந்தான். பக்தர் என்பதை உணர்ந்தான். அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். 

இதனிடையே பாண்டு ரெங்கன் அசரீரியாய்," *அரசனே நீ தவறு செய்து விட்டாய்!நான் பண்டரீபுரம் செல்கிறேன் பானுதாசரிடம் என்னை ஒப்படைத்து விடு!* என்றது.

சாது பானு தாசர் சந்தோஷமானார். பாண்டு ரெங்கனை ஊர்வலமாக எடுத்துச் சென்று பண்டரீபுரத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தார்.

பண்டரீபுரம் பாண்டு ரெங்கன் வரவில்  களைக் கட்டியது. மக்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
*பக்தி என்றும்*
*வெல்லும்!* 
*பகவான் பக்தனை  காப்பான்!*


*.......*

Wednesday, 15 December 2021

அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்

*வைகுண்ட ஏகாதசி*
கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச்  சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

*"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."* 
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

அவன்தான்... அந்தக்  குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.
*'எங்க கூப்பிடற கண்ணா?'*

   *"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"*

*'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க  இருக்காங்க..  திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'*

*"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"*

*'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'*

*"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"*

*'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப் புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'*

*"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking.........   அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக!

*'அப்படிதான்!  அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'*

*"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."*

*'என்ன? கேளு!'*

 *"சொர்க்கத்துக்குப் போகணுமா?  பரமனின் பதத்தை அடையணுமா?  எது வேணும்?"*

*'குழப்பாதே கண்ணா!'*

*"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."*

*'அப்போ ரெண்டும் வேறயா?!'*

*"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"*

*'அப்படின்னா??'*

*"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற....                            பண்ணின பாவத்துக்கெல்லாம் எமகிங்கரர்கள் எண்ணை சட்டில  போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில, 'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."*

*'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'*

*"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."*

*'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'*

*"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."*

*"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."*

*"ஆனா கஷ்டம் வந்தா மட்டும்,  'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"*

*'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'*

*"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு  சொல்றேன்.."*

*"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."*

*"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "*

*"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."*

*"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."*
 
*"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."*

*"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."*

*"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."*

*"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."*

*"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."*

*"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."*

*"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்..."*

*"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"*

*"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."*

*"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"*

    *"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."*

*"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."*

மற்றும் சிலர், 

*'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'*

இன்னும் சிலர், 

*'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'*

அவ்வளவுதான்!!

*"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."*

*"இன்று உனக்குச் சொன்னேன்!                  நீ சிலருக்கு சொல்..."*

*"நீங்கள் என் குழந்தைகள்..."* 

*"நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டு தான் இருப்பேன்.."*.

*"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."*
*"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"*

*"சொல்லிவிட்டுப் போய்விட்டான்..